Saturday, October 22, 2011

மாற்றத்தின் மறுஉருவம் வெற்றி


முளைக்க மறுக்கும் விதை, உணவாக மறுக்கும் தானியங்கள், உருவாகாத கருமுட்டை, வளர மறுக்கும் கரு, உடல் மற்றும் மன ரீதியில் வளர மறுக்கும் மனிதன், வளர மறுக்கும் தாவரங்கள், விலங்குகள் இப்படி புதிய புதியதாக மாறமறுக்கும் உயிரினங்கள், பொருட்கள், செயல்கள் நிறைந்த உலகை நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாது. மாற்றம் இல்லாதஉலகம் (இதுவும் மாற்றத்தால் உருவானதுதான்) வாழ உகந்ததாக இருக்க முடியாது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த அத்தியாவசியமாக நடைபெறவேண்டிய மாற்றம் நம் மனதில் – மனப்பாங்கில் ஏற்பட நாம் மறுத்தால் எப்படி யிருக்கும். நாம் ஒவ்வொருவரும் ஒரு குட்டி உலகம். இந்த குட்டி உலகத்தில் மாற்றமில்லை எனில் வாழ முடியுமா? வாழ்க்கையில் சிறப்பு சேர்க்க முடியுமா? “இல்லை’ எனத் தொடங்கும் பதிலைத்தான் சொல்ல வேண்டி இருக்கும்.
மாற்றம் என்ற வார்த்தை மட்டுமே இவ்வுலகில் மாறாமல் இருப்பது எனச் சொல்வதுண்டு. மாற்ற மில்லா நம் குழந்தையை நினைத்துப் பாருங்கள். பூக்காத பூவைப் போல மணம் வீச மறுக்கும் மலரைப் போல அல்லவா இருக்கும். அவ்வாறு இருக்கும் சூழலைப் பெற்றவர்களுக்கு தெரியும் அதன் வலி. மாற்றம் கட்டாயம் செயல் படுத்த வேண்டிய கட்டாய கடமை என்று அதனை செம்மையாக செயல்படுத்த வேண்டும்.
மாற்றம் என்ற சொல்லை வைத்தே சற்று வித்தியாசமாக மாற்றத்தின் வலிமையை விளக்கலாம். மாற்றம் என்ற சொல்லில் ஆரம்பத்திலேயே ஏதாவது மாற்றத்தை நாமே ஏற்படுத்தினால் (ஏமாற்றம்) ஏற்றம் என்ற நேர்மறையான வெற்றி கரமான சொல் கிடைக்கும். மாற்றத்தை நாம் செய்யாவிடில் ஏதாவது தானாகவே மாறாத மாற்றத்தில் ஒட்டிக்கொள்ளும் (ஏமாற்றம்). பிறகென்ன ஏமாற்றம் என்ற எதிர்மறையான சொல் உருவாகக்கூடும். அதனால் நாமாகவே முந்திக்கொண்டு வெற்றிக்குத் தேவையான உருமாற்றத்தை ஏற்படுத்துவோம். ஏமாற்றத்தை தவிர்ப்போம்.
என்னை யாரென்று நினைத்தீர்கள், யார் எதனைச் சொன்னாலும் நான் மாறமாட்டேன். என்னை மாற்ற யாராலும் முடியாது இப்படி பேசி தங்களது மனப்பாங்கினை மாற்றிக் கொள்ளாதவர்களின் நிலை என்னவாக இருக்கும்; அவர்களது எதிர்காலம் எப்படி இருக்கும்? மாற்றம் ஏற்றத்தின் வழிமுறை. மாறமறுத்தல் ஏமாற்றத்தின் ஏணி. ஏறுவது போல் தோன்றுமே தவிர முடிவு என்னவோ ஏமாற்றம் தான், அடுத்த நிலைக்கு நாமே ஒவ்வொரு மணித்துளியும் மாற ஒத்துழைப்பு தர வேண்டும். சுவாசக் காற்றை மாற்றுவது போல – உடலில் புதிய செயல்கள் உருவாகிக் கொண்டிருப்பது போல மாறுதல் நடந்து கொண்டே இருக்க வேண்டும். மாறமறுத்தால் உராய்வு – மன உராய்வு எதிர் மறையான மாற்றத்தை ஏற்க வேண்டிய கட்டாயத்திற்கு உட்படலாம். எனவே சூழலுக்கு தகுந்தவாறு நேர்மறையாக நம் மனப்பாங்கினை நாமே மாற்றிக்கொள்வோம். மாற்றமாகிய மரணத்தை மகிழ்ச்சி தரும் பிறப்பையும் மாறி மாறி ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கினை பெற்றுள்ள நம்மால் தேவைக்கு தகுந்தவாறு மற்ற தருணத்தில் நம் மனப்பாங்கினை மாற்றிக் கொள்ளவா முடியாது. நிச்சயம் நம்மால் முடியும். மாற்றத்தின் மறுஉருவம்தான் வெற்றி. தோல்வி என்ற நிலையில் மாற்றம் செய்தால் வெற்றி. வெற்றி என்ற நிலையில் மாற்றம் செய்தால் இன்னொன்று வெற்றி கிடைக்கும். ஆம். நண்பர்களே, மனப்பாங்கில் மாற்றம் செய்வோம் இன்னொரு வெற்றிக்காக….

Thanks :- ஆர். முருகேசன் M.A., M.Phil., Ph.D.,
மனநல ஆலோசகர், மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர்

0 comments:

Post a Comment