Saturday, October 22, 2011

எதிலும் வெற்றி பெறுங்கள்


ஆங்கில புதுவருடம் பிறந்தது. தமிழ் புத்தாண்டும் பிறந்துள்ளது. நம் மனதிற்குள்ளும் புதிய சிந்தனைகளும் புதிய கோணத்தில் பிறந்து வாழ்க்கையில் புதிய சாதனைகளை படைக்க இருக்கும் வருடமாக தொடர வாழ்த்துக்கள். தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற பழமொழி பிறந்து எத்தனை வருடங்களோ? ஆனால் தை மாதம் வழிபிறக்கும் மாதம் தான். நமக்கு வலிமை பிறக்கும் வெற்றி மாதமாக இருக்கட்டும். வெற்றி வெற்றி என்று சொல்லுகிறோம் வெற்றியின் உண்மையான அர்த்தம் என்னவென்றால் நாம் விரும்புவதை விரும்புகிற நேரத்தில் விரும்புகிற வகையில் அடைவது தான் வெற்றி. எனக்கு தன்னம்பிக்கை புத்தகத்தில் அட்டைப்படத்தில் எனது புகைப் படம் வர வேண்டும். அந்த அளவிற்கு எனது முன்னேற்றமும் புகழும் எனது செயல்பாடுகளும் இருக்க வேண்டும் என்று விரும்புவதாக வைத்துக்கொண்டால் அது நடக்கும் போது தான் எனக்கு வெற்றி. வெற்றி என்பது ஒருவருக்கு ஒருவர் மாறுபடும். ஆனால் விரும்புவதை அடையும் போது எல்லாமே வெற்றி தான். ஆனால் அதில் சமுதாய சீர்கேடு தீமைவராமல் கவனித்துக் கொள்வது நமது கடமை.
படித்த விசயத்தை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.
உருளைக்கிழங்கு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அவைகளை அளவுவாரியாக பிரித்து லாரியில் அடுக்கி சந்தைக்கு எடுத்து செல்வதில் அதற்கான கூலி, சிரமம் இவற்றோடு கொண்டு செல்லும் கரடு முரடான பாதை பெரிய சவாலாக இருந்தது. குண்டும் குழியுமான பாதையில் வகைப்படுத்திய உருளைக்கிழங்குகள் சந்தைக்கு செல்வதற்குள் கலந்து விடுவதால் வகைவாரியாக விற்பதில் திணறினார்கள். ஒருவர் மட்டும் இதற்கெல்லாம் கவலைப்படவில்லை. விற்பனையில் தோற்கவில்லை. அவரை அணுகிய மற்ற விவசாயிகள் ஆச்சரியத்துடன் அதன் ரகசியம் என்ன என்று கேட்டனர். அவர் சொன்னார், ”இது மிகவும் சுலபமானது. நான் வகைவாரியாக லாரியில் அடுக்குவதில்லை. எல்லாவற்றையும் ஏற்றிக்கொண்டு கரடு முரடான பாதையில் செல்லும்போது குழுங்கி குழுங்கி லாரியின் அடிப்பகுதிக்கு சிறிய அளவு உருளைக்கிழங்குகள் வந்து விடுகின்றன. மத்தியில் நடுத்தரமான அளவுள்ள உருளைக்கிழங்குகளும் மேற்பகுதிக்கு பெரிய அளவுள்ள உருளைக் கிழங்குகளும் சந்தை செல்வதற்குள் வந்து விடுகின்றன. எனக்கு அளவு வாரியாக பிரிக்க வேண்டிய தேவையும் இல்லை கூலியும் இல்லை. அதைவிட கரடு முரடான பாதையும் எனக்கு தடையாக இல்லை”. கேட்டதும் மற்ற விவசாயிகள் ஆச்சரியப்பட்டனர்.
வெற்றியாளர்கள் சாதாரணமானவர்கள் தான். ஆனால் வித்தியாசமான அணுகுமுறையை தனதாக்கி கொள்பவர்கள் என்பது எத்தனை உண்மையாகிறது பார்த்தீர்களா?
கடினமான பாதையில் பெரிய உருளைக் கிழங்குகள் மட்டும் மேலே வருவ தில்லை. வெற்றியாளர்களும்தான். ஒவ்வொரு வெற்றி யாளர்களின் கடந்துவந்த பாதை கடினமாகத் தான் இருந்திருக்கும். உங்கள் வாழ்க்கை பாதை கடினமானதாக இருக்கிறது போலத் தோன்றி னால், கவலைப்படாதீர்கள். நீங்கள் வெற்றியை நோக்கி பயணிக்கிறீர்கள் என்று அர்த்தப்படுத்திக் கொண்டு விரையுங்கள். விட்டு விலகாதீர்கள்.
நம் பலவீனம்கூட பலமாக மாறிட சாத்தியமிருக்கிறது என எண்ணும்போது இந்த கதை ஞாபகத்திற்கு வருகிறது. கார் விபத்தில் தனது இடது கையை இழந்த ஒரு சிறுவன் ஜூடோ கற்றுக்கொள்ள ஒரு குருவை அணுகி தன் விருப்பத்தை தெரிவித்தான். அவனது ஆர்வத்தைக் கண்ட குரு அவனுக்கு அந்த கலையைக் கற்றுக்கொடுக்க சம்மதித்தார். ஒருமாதம் முழுவதும் ஒரு பாடத்தை மட்டுமே கற்றுக்கொடுத்தார். மாதங்கள் சில கழிந்தன. ஆனால் பாடம் என்னவோ முதல் கற்றுக் கொடுத்தது மட்டுமே. ஏன் எனக்கு வேறு பாடம் சொல்லித் தரவில்லை எனக் கேட்டான். அதற்கு குரு, ”தற்போது கற்றுக்கொண்டதை நன்றாக கற்றுக்கொண்டுள்ளாய். அதுவே உன் தேவையை பூர்த்தி செய்யும்”, என்றார். சிறிது வருத்தமாக இருந்தாலும் குரு சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டான். ஒருநாள் ஜூடோ போட்டிக்கு அழைத்துச் சென்று கலந்து கொள்ள வைத்தார்.
முதல் இரண்டு போட்டிகளில் வெற்றிப் பெற்றான். மூன்றாவது சற்று கடினமானதாக இருந்தாலும் அவனே வென்றான். அவனுக்கே ஆச்சரியம். கடைசி போட்டி. இம்முறை எதிராளி பெரிய வலிமை பொருந்திய அனுபவச்சாலி. போட்டி ஆரம்பித்த சில நேரத்தில் அச்சிறுவன் எதிராளியால் பலமாக தாக்கப்பட்டான். இடைவேளை தருணத்திலே போட்டியை நிறுத்தி விடலாம் இனி அந்த சிறுவனால் எதிர்கொள்ள முடியாது என முடிவெடுக்கும் தருவாயில் குரு குறுக்கிட்டு அவனை போட்டிக்கு அனுமதி யுங்கள் என சொன்னதை ஏற்றுக்கொண்டதால் போட்டி மறுபடியும் தொடர்ந்தது. சிறுவனின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் முடிவில் எதிராளி தோற்றான். சிறுவன் ”சாம்பியன்” பட்டத்தை வென்றான்.
வீடு திரும்பும் போது அச்சிறுவன் குருவை நோக்கி, ”இடதுகை இழந்த என்னால் எப்படி பலமிக்க எதிராளியை வெல்ல முடிந்தது,” என்றான். குரு சொன்னார், நீ இரண்டு காரணங்களுக்காக வெற்றி பெறமுடிந்தது. ஒன்று; நீ கற்றுக்கொண்ட பாடம் ஜூடோவில் மிகவும் கடினமான பகுதி. அதை திரும்ப திரும்ப பயிற்சி செய்து நன்கு தேர்ச்சி பெற்றிருந்தாய். இரண்டு; அந்த பாடத்தை பயன்படுத்தி தாக்கும் போது தாக்குபவரின் இடதுகையை மடக்கி பிடித்தால் மட்டுமே தாக்குதலில் இருந்து தப்பிக்க முடியும். உனக்கு இடது கை இல்லாமல் இருந்ததால் அவனால் உன் தாக்குதல் இருந்து தப்பிக்க முடியாமல் தோற்றான்” என விளக்கமளித்தார்.
அச்சிறுவனின் பலவீனம் பலமாக சாத்தியமாகும் நிலை இருக்கும் போது நம் பலம் அறிந்து அதனை சரியாக பயன்படுத்தினால் ?!.
எங்கும் எதிலும் வெற்றி பெறலாம்.



Thanks :Author: 

0 comments:

Post a Comment