Saturday, October 22, 2011

தன்னம்பிக்கையுடன் வாழுங்கள்! வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!


மரணம்’ என்ற வார்த்தையைக் கேட்டாலே நம் மனதில் ஒரு வகையான அவஸ்த்தை ஏற்படுகிறது. மரண பயம் என்பது எல்லோருக்கும் உண்டு. ‘ஜனனம்’, ‘மரணம்’ போன்றஇரு விஷயங்களுக்கு மட்டுமே விஞ்ஞானத்தால் இன்னும் பதில் சொல்ல இயலவில்லை. எல்லோருக்கும் மரணம் நிச்சயம். ஆனால் எப்பொழுது, எப்படி என்பது தான் சஸ்பென்ஸ் (Suspense). தன்னுடைய மரணத்தை தானே நிச்சயிப்பவர்களும் உண்டு. ‘தற்கொலை’ – தன் வாழ்க்கையைத் தானே முடித்துக் கொள்வது. கோழைகள் எடுக்கும் தைரியமான முடிவு! இந்த நிலையை நாம் பலரிடம் பார்க்கிறோம். தற்கொலை செய்து கொள்வதில் சிறு வயதினரே அதிகம் என ஆய்வுகள் சொல்கின்றன. பெண்களை விட இதில் ஆண்களே அதிகம். இன்னொரு அதிர்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லக்கூடிய உளவியல் நிபுணர்கள் கூட தற்கொலை செய்து கொள்வதுண்டு.

ஒரு இளவயதுள்ள, ஆரோக்கியமான, அசாத்திய திறமையுள்ள ஒருவர் தற்கொலை செய்து கொள்கிறார் என்றால் அதற்கான காரணம் என்று எதைக் குறிப்பிடுவது? வாழ்க்கையில் நேரிடும் பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் இல்லாத தன்னம்பிக்கை இழந்தவராகத் தான் இருக்க முடியும். தற்கொலை செய்ய தைரியம் இருக்கும் அவர்களுக்கு, பிரச்சனைகளை சமாளிக்கும் தைரியம் இல்லை என்பது தான் வருத்தம்.
சில வருடங்களுக்கு முன்பு எங்கள் அடுத்த வீட்டில் கணவன், மனைவி அவர்கள் பெண் குழந்தை என மூன்று பேர் இருந்தனர். கணவர் மிகவும் நல்ல குணமுடையவர், அமைதியானவர், எப்பொழுதும் அவர் முகத்தில் ஒரு சாந்தம் இருக்கும். இவர் தியானப் பயிற்சி மேற்கொண்டுள்ளாரோ என்றசந்தேகம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. ஏனென்றால் அவர் ஒவ்வொரு வேலையையும் மிகப் பொறுமையாக செய்பவர். அதிகம் சத்தம் போட்டுகூட பேசமாட்டார். நல்ல வேலையும், நல்ல சம்பாத்தியமும் உள்ளவர். அவர் குடும்பத்தில், யாரையுமே கடிந்து ஒரு வார்த்தைகூட பேசியதில்லை என்று அவர் மனைவி எங்களிடம் பெருமையாக சொல்வார். அவர்களின் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது.
இரண்டு வருடங்கள் கழித்து அவர்கள் வேறொரு வீட்டிற்குக் குடிமாறிச் சென்றனர். அங்கு சென்று 6 மாதங்கள் கழித்து திடீரென்று அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றதகவல் வந்தது. அந்த தகவல் எங்களுக்குப் பயங்கரமான அதிர்ச்சியைத் தந்தது. அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பங்குச்சந்தையில் ஏற்பட்ட பயங்கர நஷ்டம். ஒரு நல்ல வேலையில் இருக்கும் அவரால், இந்த நஷ்டத்தை எப்படியாவது சமாளிக்கலாம் என்றதன்னம்பிக்கையே வரவில்லை. எல்லா விஷயங்களையும் பொறுமையாக செய்யும் அவர், இந்த விஷயத்தில் அவசரப்பட்டுவிட்டார். அவரது மனம் திடமாக, தன்னம்பிக்கையோடு இருந்திருந்தால் இப்படி ஒரு நிலை ஏற்பட்டிருக்காது.
இது போன்று மாணவர்களிடம் தற்போது தற்கொலை எண்ணங்கள் அதிகம் காணப்படுகிறது. தேர்வுகளில் தோல்வி அடையும் மாணவர்கள் பலரும் தங்கள் வாழ்க்கை இதோடு முடிந்து விட்டது என்று எண்ணி தற்கொலை செய்து கொள்கின்றனர். தோல்விகள் தான் வெற்றியின் ஏணிப்படிகள் என்பதை அவர்கள் புரிந்து கொள்வதில்லை. தங்கள் தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் முழுவதுமாக இழந்து விடுகின்றனர். இது போன்று பல சம்பவங்களை எடுத்துக்காட்டாக கூறலாம். பணத்தட்டுப்பாடு, தொழிலில் தோல்வி, விவாகரத்து, வருங்காலத்தைப் பற்றிய அச்சம் போன்று வாழ்வில் நடக்கும் துயர சம்பவங்களால் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்கின்றனர். இதனால் அவர்கள் குடும்பத்தினர் அல்லது உறவினர்கள் படும் துன்பங்கள் எத்தனை! தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களில் சிலர் உயிர் தப்பிய பின்னர் வாழ்க்கையின் மகத்துவத்தையும், தங்கள் உறவினர்களின் முக்கியத்துவத்தையும் உணர்கிறார்கள்.
எடுத்துக்காட்டாக, எங்கள் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண், அவள் கணவனுடன் வீட்டில் எப்பொழுதும் பிரச்சனை என்று கூறுவாள். மிகவும் சிறிய வயதில் பெற்றோர்களை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட அவர்களுக்கு 2 குழந்தைகள். கணவன் பொறுப்பில்லாமல், எந்த வேலைக்கும் செல்லாமல் இருப்பதாகவும், தான் வீட்டு வேலை பார்த்து அதில் வரும் பணத்தையும் தன் கணவர் அநாவசியமாக செலவு செய்வதாகவும் கூறி அடிக்கடி சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். ஒருநாள் வாக்குவாதம் அதிகமாக, அவள் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தாள். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தாள். மருத்துவமனையில் 1 மாத காலம் இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்பொழுது சரியாக கவனிக்க ஆள்இல்லாததால் அவளது இரு குழந்தைகள் பெரும் அவதிக்குள்ளாயினர். அதன் பிறகு அவளது தவறைஉணர்ந்து மிகவும் வருத்தப்பட்டாள். அவளுக்கு ஏதேனும் ஒன்று நிகழ்ந்திருந்தால், அந்த குழந்தைகளின் நிலை? இப்படி தற்கொலை செய்து கொள்ளும் ஒவ்வொருவருக்குப் பின்னும் அவதிக்குள்ளாகும் பல ஜீவன்கள் உள்ளன.
ஒருவர் எந்த மனநிலையில் தங்கள் வாழ்க்கையை ஒடுக்கத் தீர்மானிக்கின்றனர்? ‘வாழ்க்கையில் எந்தப்பிடிப்பும் இல்லை, இனி எல்லாம் முடிந்துவிட்டது’ என்று தன்னம்பிக்கையை இழந்த, மிகுந்த மன அழுத்தம் உடையவர்கள் தான் தற்கொலையில் ஈடுபடுகின்றனர். பல சமயங்களில் தனிமையில் இருக்கும் பொழுதுதான் தற்கொலை எண்ணங்கள் அதிகமாகத் தூண்டப்படுகிறது. மனம் திறந்து நாம் நம் பிரச்சனைகளை நம் நண்பரிடமோ, நமக்கு நெருங்கியவரிடமோ பேசினாலே பாதி பாரம் குறைந்தது போல் உணர்வோம். ஒருவர் மன உளைச்சலுக்கு ஆளாகும் போது அவருக்கு தன்னம்பிக்கை அளிக்கும் விதத்தில் அவரது குடும்பத்தினர் நடந்து கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு மாணவர்கள் தேர்வில் தோல்வியடையும் போது அடுத்த முறைதேர்ச்சி பெறுவதற்கான வழிகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் கூறி அவர்களை உற்சாகப்படுத்துதல் (Motivate) வேண்டும். அவர்களை கேலி செய்வதோ, கேவலப்படுத்தவோ கூடாது. சிறு வயதிலிருந்தே நிறைய தன்னம்பிக்கையையும், பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் தைரியத்தையும் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் வளர்க்க வேண்டும். துன்பமும், துயரமும் வரும்போது தங்கள் குடும்பத்தினர் தங்களுக்கு ஒரு ஊன்றுகோலாக இருப்பார்கள் என்றஎண்ணமே அவர்களை உற்சாகப்படுத்தும், தோல்விகளை எதிர்த்துப் போராடவும் உதவும்.
எனவே, தன்னம்பிக்கையுடன் வாழுங்கள் !
வாழ்க்கையின் மகத்துவத்தை உணருங்கள்!



Author: தன்னம்பிக்கைஆசிரியர் குழு

0 comments:

Post a Comment