Friday, July 22, 2011

முயன்றால் முடியாதது இல்லை


வாழ்க்கையில் உயரத் துடிக்கும் உள்ளங்களே! நீங்களும் குறிக் கோளில் உறுதி உள்ளவர்களாகத் திகழ வேண்டும். ஒரு செயலில் முயற்சியுடன் ஈடுபடும் போது, நீங்கள் சோர்வடையாமல் உற்சாகத் துடன் செயலாற்றவேண்டும்.
‘பெரிய பலன்கள் இடையறாத, கடின உழைப்பினாலேயே கிடைக்கின்றன. பலவீன மான உள்ளங்கள் கூடக் கடுமையான உழைப் பினால் பலம் பெற்றுவிடுகின்றன’ என்கிறார் தத்துவஞானி பேக்கன்.
நீங்கள் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். இடைவிடாமல் பெய்கின்ற மழையால் சலவைக்கல்கூடத் தேய்ந்து போகும்’ என்று குறிப்பிடுகிறார் ஷேக்ஸ்பியர்.
‘லட்சியத்தை அடைவதில் பெரிய மகத்துவம் எதுவும் இல்லை. அந்த லட்சியத்தை அடைவதற்காக நடத்தும் போராட்டம்
இருக்கிறதே, அதில்தான் எல்லா மகத்துவங்களும் அடங்கி இருக்கின்றன’ என்கிறார் மில்னஸ்.
வாழ்க்கையாக இருந்தாலும் சரி, படைகள் மோதிக்கொள்ளும் போர்க்களமாக இருந்தாலும் சரி, உழைப்பு, உறுதி, விடாமுயற்சி ஆகியவை தாம் இறுதியில் வெற்றியைத் தருகின்றன. நெப்போலியன் மிகப்பெரிய வீரன். போர் என்றால் அவனுக்கு உயிர். அத்தகைய நெப்போலியன், வெலிங்டனிடம் தோற்றான். வெலிங்டன் தன்போர் வீரர்களிடம் சொன்னான்!
‘வீரர்களே! பலமாகத் தாக்குங்கள்! இந்தப் போர்க்களத்தில் யாரால் நீடித்துத் தாக்க முடிகிறதோ அவர்களுக்குத்தான் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கப் போகிறது’ வெலிங்டன் எவ்வளவு பெரிய உண்மையைச் சொன்னான்.!
”ஸ்காட்லாந்து நாட்டு அரசன்

ப்ரூஸ், போரில் தோற்றுப்போய்
நாட்டை இழந்து, காட்டிலே
தலைமறைவாக வாழ்ந்து
கொண்டிருந்தான்.
சோர்வுடன்
அவன் படுத்துக்
கொண்டிருந்த போது,
சுவரின் மீது சிலந்திப்பூச்சி
ஏறிக் கொண்டிருப்பதைப்
பார்த்தான். அது தன்னுடைய
கூட்டை நெருங்கிய போது வழுக்கிக் கீழே விழுந்தது. கீழே விழுவதும், மறுபடியும் ஏறுவதுமாகப் பலமுறை முயன்று
இறுதியில் வெற்றி பெற்றது.
தோல்விகளைப் பொருட்படுத்தாமல் தன்னுடைய இருப்பிடத்தை அடையும் வரையில் சிலந்தி காட்டிய விடா முயற்சியிலிருந்து ப்ரூஸ் ஒரு பாடத்தைக் கற்றுக் கொண்டான். அவனு டைய உள்ளத்தில் நம்பிக்கை ஒளி பிறந்தது. சிதறிக் கிடந்த தன்னுடைய படைகளை மறுபடியும் ஒன்று திரட்டினான். போரில் பகைவர்களை வென்று நாட்டை மீட்டு மீண்டும் அரசனான்.
இடைவிடாத முயற்சியுடையவன் வீட்டுக் கதவைச் செல்வம் என்றமங்கை தட்டு வாள். இதில் ஐயமில்லை. முயற்சிகள் தொடரு மானால் வெற்றியும் உங்கள் வாழ்க்கையில் படரும். மின்சாரத்தைக் கண்டுபிடித்த எடிசன், முயற்சியினால் முன்னுக்கு வந்தவர் அல்லவா?
மனம் தளராமல் இடைவிடாது முயற்சி செய்யுங்கள். உழைத்துவிட்டுக் காத்திருங்கள். பலன் கை மேல் கிடைக்கும்.
தச்சுப் பட்டறையில் வாழ்க்கையைத் தொடங்கிய ஆபிரகாம் லிங்கன் விடாமுயற்சி யின் விளைவாக, அமெரிக்க ஜனாதிபதி பதவியை அடைந்தார். கல்வி கற்று வாழ்க்கையில் முன்னேறவேண்டும் என்றஆர்வத்துடன் புத்தக மூட்டையைத் தலையிலே சுமந்து, ஆற்றைக் கடப்பதற்குத் தினமும் நீந்தி, கடந்து பள்ளிக்குச் சென்று படித்து முன்னுக்கு வந்தார். படிப் படியாக உயர்ந்து ”பாரதப் பிரதமர்” என்ற உன்னதமான பதவியை அடைந்தார் லால்பகதூர் சாஸ்திரி. தன்னுடைய அயராத உழைப்பினால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிறபெரிய பதவியை அடைந்தார் காமராஜர். ஏழைக் குடும்பத்திலே பிறந்த ஜஸ்டீஸ் முத்துச்சாமி ஐயர் தெருவிளக்கு வெளிச்சத்தில் படித்து முன்னேறி னார். படிப்படியாக உயர்ந்து சென்னை உயர்நீதிமன்றநீதிபதியானார்.
வாழ்க்கையின் பெரிய முட்டுக்கட்டை யாக ஏழ்மை இருக்கிறதே என்று எண்ணி சோர்வு அடையாதீர்கள். உழைப்புக்கு நீங்கள் ஒரு போதும் ஓய்வு கொடுத்துவிடாதீர்கள். முயன்றால் முடியாதது இல்லை என்பதை நீங்கள் உணர வேண்டும். உழைப்பு ஒருபோதும் வீண் போவதில்லை. உழைப்பு தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.
எந்த முயற்சியாக இருந்தாலும் அதில் நேர்மை இருக்க வேண்டும். நேர்மையற்ற முயற்சியால் எந்தப் பலனும் இல்லை. எல்லோரையும் நடுங்க வைக்கின்ற கொலை காரனும், பணத்தைக் கொள்ளையடிக்கும் கொள்ளைக்காரனும் இடைவிடாத முயற்சி யினால் தாங்கள் நினைத்த காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள். ஆனால், இவை களெல்லாம் முயற்சிகள் ஆகுமா? இவைகளை உண்மையான உயர்வு என்று ஏற்றுக்கொள்ள முடியுமா?
எனவே, முயற்சியுடன் உழைத்துக் கொண்டே இருங்கள். நீங்கள் உயர்வது மட்டுமல்ல, உங்களைச் சார்ந்த சமுதாயமும் உயரும். இதில் ஐயமில்லை. முயன்றால் முடியாதது எதுவுமே இல்லை.

- தாராபுரம் சுருணிமகன்

0 comments:

Post a Comment