தி.க. சந்திரசேகரன்
இரண்டு எருமைகள் ஒன்றோடொன்று மனம் விட்டுப் பேசிக்கொண்டிருந்தன.
” அதோ, தொலைவிலே ஓர் உருவம் நம்மை நோக்கி வருகிறதே, அதற்கு என்னவென்று பெயர்”.
” அதுவா, அதை மனிதன் என்று சொல்லுவார்கள்.”
” அப்படியா! அதைப்போய் எதற்குக் கடவுள் வீணாகப் படைத்தார்?”
” வேண்டாம் ! வேண்டாம்! நீ அப்படிச் சொல்லாதே! ஒருவகையில் அவன் வாழ்க்கை4க் குக்கூட ஒரு பொருள் இருக்கிறது.”
” எனக்குப் புரியவில்லை.”
” இதோ பார் ! நம்மால் புல்லைச் சாப்பிட முடியும். பிண்ணாக்கைச் சாப்பிட முடியும். இருந்தாலும் அந்தப் பிண்ணாக்கை உற்பத்தி செய்ய முடியுமா? முடியாது. ஆகவே, பிண்ணாக்கை உற்பத்தி செய்யவே கடவுளால் படைக்கப்பட்டவன் மனிதன்”.
” அப்புறம்!”
” உனக்கு முதுகில் அரிக்கிறது. என்ன செய்தாலும் உன்னால் சொறிந்துகொள்ள முடியாது. மனிதன்தான் சொறிந்துவிட வேண்டும்.”
” உம்”
” உனக்கு உடம்பு சரியில்லை. மருந்து கொடுக்க ஊசிபோட மருத்துவரிடம் அழைத்துப் போக இதோ, இந்த மனிதன் உதவுவான்.”
” அவ்வளவுதானா”
” இல்லை. உன் மடியில் பால் சேருகிறது. உன்னாலோ, என்னாலோ கறக்க முடியுமா?”
” முடியாது ”
” பாலை இந்த மனிதன்தான் கறக்க வேண்டும்.
”பிறகு”
” கொம்பு சீவி விடுவது. உடலின் மேலுள்ள உணியைப் பிடிப்பது… பண்டிகைக் காலங்களில் கொம்புக்கு வண்ணம் திட்டுவது, அலங்காரம் செய்வது, சந்தைக்குப் போய்ப் பருத்திக் கொட்டை, புளியம்பொட்டு, அகத்திக்கீரை வாங்குவது இப்படி எத்தனையோ வேலைகள்.”
” அடடா! இவ்வளவு வேலை செய்கிறானா மனிதன் பாவம்!”
” இதில் போய் என்ன பருவம் எருமைகள் மட்டும் இல்லையென்றால் மனிதர்களுக்குச் செய்வதற்கு வேலையே இருக்காது ! ஆகவே, உண்மையில் அவர்கள் நமக்குக் கடன்பட்டிருக்கிறார்கள்.”
” உண்மை! உண்மை!”
நண்பர்களே!
இரண்டு எருமைகளின் உரையாடல் கேட்டோம். கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால் அந்த உரையாடலில் உண்மை இருக்கத்தானே செய்கிறது.
எருமைக்ளுக்காக மனிதன் வாழ்வது போல் மற்றவர்களுக்காகவே வாழும் மனிதர்கள் ஏராளம்.
பெற்றவர்களுக்காக வாழும் பிள்ளைகள். கணவனுக்காகவே வாழும் மனைவி. முதலாளிக்காகவே உழைத்து வாழும் தொழிலாளி.
இப்படி வாழும் பலரைப் பார்க்கும்போது நம் மனத்தில் ஒரு கேள்வி எழாமல் இல்லை.
” இவங்களுக்கென ஆசாபாசங்கள் இல்லையா?”
இவர்களுக்கென்று ஒரு வாழ்க்கை வாழ்கை – ஓர் உலகம் இல்லையா? செக்குமாடுகள் போலச் சுழன்று சுழன்று கடைசி மூச்சு வரை உழன்று கொண்டிருப்பதுதான் வாழ்க்கையா?
” இதனால் பெற்றோரையோ, கணவனையோ, முதலாளியையோ அலட்சியம் செய்ய வேண்டுபம் என்று சொல்லிவில்லை. உங்கள் வாழ்க்கை என்ன ஆயிற்று? என்றுதான் கேட்கிறேன்.
வைன் டபிள்யூ டியர் என்ற எழுத்தாளர் தன்னுடைய புகழ்பெற்ற ஓரு நூலில் எழுதுகிறார்.
” உங்களுக்கு என்று இருப்பது ஒரு வாழ்க்கை. உங்கள் உடலுக்குள் வேறு ஒருவர் புகுந்து கொண்டு உங்களைப் போல சிந்திக்கவோ, உணரவோ முடியாது! நீங்கள் நீங்கள்தான்! ஏன் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வேறு சிலர் கையிலே ஒப்படைத்து விட்டு அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஈடுகொடுக்க வேண்டும். உங்களுடைய வாழ்க்கையை நீங்களே ஏன் முழுமையாக உங்கள் விருப்பப்டி வாழக் கூடாது?
ஆகவே, நம்முன் இப்போதுள்ள கேள்வி, ” நாம் ஏன் முழு வாழ்க்கை வாழக்கூடாது? நம்முடைய இறுதி மூச்சு உள்ளவரை ஏன் ஒரு சாதனை நிறைந்த, சலசலப்பும், சலனமும் இல்லாத – மகிழ்ச்சியான – நிறைவான வாழ்க்கையை வாழக் கூடாது?”
‘ உங்களுக்குள் ஒளிந்திருக்கும் ஆற்றல்’ என்ற தலைப்பில் ஒரு பயிற்சியாளர் ஒரு குழுவிற்கு பயிற்சி அளித்து வந்தபோது, அவர்களிடம் ஒரு கேள்வி கேட்டார்.
” ஒரு செங்கலின் பயன் யாது?”
வந்த பதில்கள் :
கட்டடம் கட்ட,
யாரையாவது தாக்க,
பிள்ளையார் பந்து விளையாட,
மஞ்சள், குங்குமம் இட்டு கடக்கும் போது கால் வைக்க,
சின்ன நீரோடையை கடக்கும்போது கால் வைக்க
செங்கல் தூளில் பல் துலக்க,
தூளாக்கி மிளகாய்த் தூளில் கலப்படம் செய்ய,
சிறிய கல்லாக உடைத்து முட்டுக்கொடுக்க,
புடலங்காயில் கட்டி தொங்கிவிட,
பேப்பர் வெயிட் போல் பயன்படுத்த,
அடுப்பு தாயார்க்க,
தோட்டத்தில், பாதைகளில் எல்லையாக பதிக்க,
மரம் வளர்க்க,
செடி நடும்போது, சுற்றுத்தடிப்பு கட்ட,
இப்படி கிட்டத்தட்ட நாற்பது பதில்கள் வந்தன!
ஒரு சாதாரண, செங்கல்லே இத்தனை வேலைகளைச் செய்யும்போது, நம்மால் எவ்வளவு செய்ய முடியும்?
வாழ்க்கையில் நம் குறிக்கோள் என்ன?
எருமை மாட்டுக்கு பணிவிடை செய்ய மட்டுமா பிறந்திருக்கிறோம்?
நம்மால் நல்ல முடிவுகளை எடுக்கு முடியும். பேச்சாற்றாலை பெருக்கிக் கொள்ள முடியும். வாய்ப்பேச்சில் வீரராக மட்டுமின்று செயலில் திறமையையும் வெளிப்படுத்த முடியும்.