நம்மை மனிதனாக உருவாக்க வேண்டும் என்பதுதான் இறைவனுடைய இலட்சியம். அவருக்கு நம்மை படைக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்கின்றபோது, அவரால் தோற்றுவிக்கப்பட்ட நமக்கு எப்படி இலட்சியம் இல்லாமல் இருக்க முடியுமா?
உயிர் இல்லாத மனிதனைக் காணமுடியாதது போல இலட்சியம் இல்லாத மனிதனைக் காண முடியாது.
எந்தவிதமான இலட்சியத்தைக் கொண்டு இருக்கிறோமோ அந்த விதமாகவே வாழ்க்கை அமையும். நாம் எப்படிப்பட்ட இலட்சியத்தை மேற்கொள்ளப் போகிறோம்.
வெற்றி வீரர்களாக, அறிஞர்களாக, மேதையாக மாறப் போகிறோமா? அல்லது வெந்த சோத்தைச் சாப்பிட்டு நொந்துப் போகப் போகிறோமா? எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் தான் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். நாம் எடுத்துக்கொள்ளும் இலட்சியம் தான் வாழ்க்கையை வளமுடன் வாழ வழிகாட்டும்.
வாழ்க்கைக்கு வழிகாட்டியாக உயர்ந்த ஓர் இலட்சியம் இல்லாவிட்டால் மனிதன் மிருகமாகிவிடுவான் என்கிறார் விவேகானந்தர்.
உயர்ந்த இலட்சியவாதிகள் மூலம்தான் நிலையான வாழ்க்கையை நிறுவ முடியும் என்று கூறுகிறார் எமர்சன்.
இலட்சியத்தை நேசிக்கிறோம் என்பதற்கு அடையாளம் என்னவென்றால் அதற்காக வாழ்ந்து காட்டுவதுதான்.
நம்முடைய இதயத்தில் எந்த இலட்சியத்தைக் கொண்டு இருக்கிறோமோ அதற்கு ஏற்றபடிதான் வாழ்க்கை அமையும்.
உயரமான மலைகளின் மீது ஏறிச்சென்று இதுவரை மனிதனது அடிச்சுவட்டையே காணாத நாடுகளை ஆராய்ந்தவர்களுடைய இலட்சியத்திற்கு முன் குறுக்கே எதுவும் நிற்க முடியாது.
கிரீன்லாந்தில் விஞ்ஞான ஆராய்ச்சி நடத்துவதற்காக நண்பருடன் புறப்பட்டார் எரிக்ஸன். சில மாதங்களுக்குள் இவர்களிடம் இருந்த உணவுமுடிந்து போயிற்று. காலில் அணிந்திருந்த காலுறைகளும் கிழிந்துவிட்டன. பட்டினியோடும் வெறுங்கால்களுடனும் கடுங்குளிரில் நடந்தனர்.
நடக்கச் சக்தியற்ற நிலை வந்தும் எரிக்ஸன் நெடுந்தொலைவிற்கு நடந்தும், ஊர்ந்தும் சென்றார். தாங்கள் இறப்பது உறுதி என்ற நிலைக்கு ஆட்பட்டனர். ஆராய்ச்சிக்குறிப்புகளைத் தகுந்த பாதுகாப்பான முறையில் வைத்துவிட்டார் எரிக்ஸன். பனிக்கட்டியின் மீது ஊர்ந்து சென்றார்.
நவம்பர் மாத பனியும், குளிரும் இவரை வாட்டியது. இறுதியில் பனிப்புயலில் சிக்கி உயிரைவிட்டார்.
ஒரு ஆண்டு சென்ற பிறகுதான் எரிக்ஸனது சடலமும், அவர் நண்பரது சடலமும் கிடைத்தன. இவருடைய ஆராய்ச்சிக் குறிப்புகளும் கிடைக்கப் பெற்றன.
மரணத்தை முக மலர்ச்சியுடன் வரவேற்ற அவருடைய இலட்சியத்தால்தான், சமுதாயம் அறியாமல் இருந்த நாடுகளைப் பற்றிய உண்மைகளை உணரமுடிந்தது.
ஒரு நாட்டைப்பற்றிய விவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு இவருடைய உயிரையே கொடுக்க வேண்டி இருந்த போதிலும் எரிக்ஸன் சோர்ந்துவிடவில்லை. தன்னுடைய உயிர் போனாலும் கவலைப்படாமல், தன்னுடைய இலட்சியம்தான் பெரியது என்று எண்ணிச் செயல்பட்ட எரிக்ஸனின் செயல்மிகவும் உயர்வானது.
விஞ்ஞான முறையில் ஆராய்ந்து முடிவுகள் புரட்சிகரமானவையாக இருந்தாலும் கூட, அக்காலத்திற்கு ஏற்றபடி இருந்த கருத்துகளுக்கு முரண்பட்டதாக அமைந்தாலும், அதற்காக விஞ்ஞானி தான் கண்டு அறிந்த உண்மைகளுக்காக உலகையே எதிர்த்துப் போராடவும் தயங்கியது இல்லை.
விஞ்ஞானி செய்யும் ஆராய்ச்சிகளாலும் வெளியிடும் கருத்துகளாலும், தங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்பட்டாலும், விஞ்ஞானி தான் மேற்கொண்ட இலட்சியத்தை எப்பொழுதும் விட்டுவிட மாட்டார்.
இலட்சியத்துடன் தொடங்கப்படும் எந்த செயலும் தோல்வி அடைந்ததாக வரலாறு இல்லை. இலட்சியம் தான் ஒரு செயலை உருவாக்கும். இது இல்லாவிட்டால் உலகத்தின் இயக்கமே இருக்காது.
இலட்சியத்துடன் செயல்பட்டால் எதிர்க்க வரும் எதுவும் இருக்கும் இடம் தெரியமால் ஓடிப்போய்விடும்.
வாழ்க்கை என்ற புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே நம்மிடம் இலட்சியம் இடம் பெற்றிருக்க வேண்டும். உயர்வான இலட்சியம் இருப்பது அவசியம்.
இலட்சியம் என்று ஒன்று இருந்தால் தான் வாழ்க்கை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் சென்று கொண்டிருக்கும்.
இலட்சியத்தை நிறைவேற்றுவதற்குத் திடமான மனவலிமை வேண்டும். எவ்வளவு இடையூறு ஏற்பட்டாலும் இதனை விட்டுவிடக் கூடாது.
சில மதங்களில் துறவிகளாக வருவதற்குப் பயிற்சி பெறும்பொழுது தங்களுடைய இலட்சியத்திலிருந்து தவறாமல் இருக்கிறார்களா என்பதற்குப் பல சோதனைகளை வைப்பார்கள். அதனை வென்றால் தான் அவர்கள் துறவியாக முடியும்.
நம்முடைய வாழ்க்கையிலும் இலட்சியத்தை அடையும் பொழுது பல சோதனைகள் குறுக்கிடும். சோதனையில் துன்புறும் போது இலட்சியத்தை விட்டுவிடக் கூடாது.
இலட்சியத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தால் நம்முடைய வாழ்க்கை பயனற்றதாகிவிடும். சிறு துன்பத்திற்காக அஞ்சி தன் இலட்சியத்தை கைவிட்ட மனிதன், தானே பெருந்துன்பத்தைத் தழுவிக்கொள்கிறான் என்கிறார் அறிஞர் வில்லியம்ஸ்.
கை அளவு கொண்ட இதயத்தில் என்ன இலட்சியத்தை உருவாக்குகின்றதோ அதற்கேற்றபடிதான் வாழ்க்கை அமையும். இலட்சியம் என்ற பாகம் சரியாக இருந்தால் தான் உடல் என்ற இயந்திரம் சரியாக இயங்க முடியும்.
நாம் என்ன இலட்சியம் கொண்டு செயலாற்றி வருகிறோம் என்பதை நம்மை நாமே கேட்டுக் கொள்வோம். இதுவரை இலட்சியம் இல்லாமல் வாழ்ந்துவிட்டோம் என்பதனைப் புரிந்துகொள்ள முடியும். இனிமேலும் இந்தநிலை தொடர வேண்டாம்.
நாம் ஒரு இலட்சியத்தை மேற்கொள்வோம். அந்த இலட்சியத்தை முன் வைத்து செயலாற்றுவோம்.