Tuesday, July 19, 2011

மாணவனே… வெற்றி மீது பற்று வை

வையத் தலைமை கொள்
ஒரு போரின் வெற்றிக்குப் படைவீரர்களை விட
படைத் தலைவனே முக்கியம்.
- நெப்போலியன்
நீ இன்றைய மாணவன், ஆனால் நாளைய விஞ்ஞானியாகவோ, மருத்துவராகவோ, பொறியாளராகவோ, தணிக்கையாளராகவோ, ஐ.ஏ.எஸ். அதிகாரியாகவோ வரக்கூடும். அப்போது தலைமை ஏற்பதற்கு இப்போதே தயாராக வேண்டும்.
தலைமைப் பண்பு என்றால் என்ன?
ஒரு நல்ல பொதுநோக்கத்திற்காக, ஒரு குழுவை வழி நடத்தும் பாங்கு தலைமைப் பண்பு எனலாம்.
உன்னுடைய தலைமைப் பண்புகளை இனங்கண்டு மெருகேற்றவேண்டும். பெற்றோர், ஆசிரியர்கள், நண்பர்கள் – இவர்கள் பொறுப்புகளைத் தரும்போது தட்டிக் கழிக்காதே வாய்ப்பாகக் கருதி ஏற்றுச் செயல்படு.
வகுப்புத் தலைவன், மாணவர் பேரவைத் தலைவன், NCC, NSS, Scout, TRC போன்ற அமைப்புகளில் உன்னை இணைத்துக் கொள்; இணைந்து செயல்படு; இணைத்து செயல்படு. நாளை நீ மாவட்ட ஆட்சியராக, காவல்துறைஆணையராக வருவதற்கு இவையெல்லாம் பயிற்சிகள், ஒத்திகைகள் என்பதை மனதில் வை.
நிமிர்ந்து நில்
இருக்கையில் அமரும்போது நிமிர்ந்து உட்கார்; நடக்கும்போதும் நிற்கும்போதும் நிமிர்ந்து நட; நிமிர்ந்து நில். உன் பார்வையில் கம்பீரமும் தெளிவும் இருக்கட்டும். இவை நான் வெல்லப் பிறந்தவன் என்னும் மனப்பாங்கை ஏற்படுத்தும். அதனால்தான் பாரதியார், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை வேண்டும் என்றார்.
நிமிர்ந்து நிற்கையில் மனதில் தன்னம்பிக்கை மற்றும் மகிழ்ச்சி ஊற்றெடுப்பதை உணரலாம்.
கூனிக் குறுகி நின்றால், இவன் இலக்கு இல்லாத சோம்பேறி என்று நினைப்பார்கள்.
உன்னுடைய தோற்றத்தை வைத்தே உன்னை எடைபோடுவார்கள். தலைநிமிர்ந்து நிற்பதே தலைமைக்கு அழகு. உன் தோற்றப் பொலிவும், உன் உடல் உணர்த்தும் செய்தியும் பிறர் மதிப்பதாக, மகிழ்வதாக இருக்குமாறு எப்போதும் பார்த்துக் கொள்.
நாம் பிறரால் மதிக்கப்பட வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே பிறர் நம்மை மதிப்பர். நாடகத்தில் கம்பீரமாக நடந்து வரும் இராஜாவைப் பார்த்து வியக்கிறோமே ஏன்? மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட நடை; வேறுபட்ட உடை. அது தான் காரணம். எனவே நீயும் மற்றவர்களிடமிருந்து வேறுபட்டு இருக்க வேண்டும். நூறு பேருக்கு நடுவே நின்றாலும் நீ அறியப்பட வேண்டும். உன்னுடைய இருப்பு மற்றவருக்குத் தெரிந்து கொண்டே இருக்க வேண்டும். பிறகு பார். நீ கொண்டாடப்படும் மனிதராக (Charismatic Personality) மதிக்கப்படுவாய். நீ தலைவனைப் போல மதிக்கப்பட வேண்டும் என நினைத்தால், தலைவனாகவே இரு.
நீ உயர்ந்து நிற்கிறாயா, தாழ்ந்து நிற்கிறாயா என்பதை உன் மனதிடம் கேள்; பெற்றோரிடம், நண்பரிடம், உறவினரிடம் கேள். பல்வேறு சமயங்களில் உன்னை ஒளிப்படம் எடுத்திருப்பார்கள். அவற்றைத் தொகுத்துப் பார். நீ நிற்கும் விதம், நடக்கும் விதம், உட்காரும் விதம் ஒரு தலைவனுக்கு உரியதாக இல்லை என்றால், அவற்றைமாற்றிக் கொள். மற்றவர்களுடைய கவனத்தை ஈர்க்கும் வண்ணம், மற்றவர்கள் உன்னை ஏற்கும் வண்ணம், மற்றவர்களிடத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் வண்ணம் உன் ஒவ்வொரு அசைவும் இருக்க வேண்டும். உன் ஒவ்வொரு செயலும் துணிவு, நேர்மை, அர்பணிப்பு, அறிவு, அன்பு இவற்றைப் பறைசாற்றவேண்டும். இந்த நிலைக்கு நீ உயர்ந்தால், பல நூறு இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாக, நன்மாதிரியாக விளங்குவாய்.
சுவாமி விவேகானந்தரைப் பார்த்து ஒருவர் கேட்டார். “ஏன் நீங்கள் வித்தியாசமான மனிதராய்த் தெரிகிறீர்கள்?” அவர் திருப்பிக் கேட்டார். “ஏன் நீங்கள் எல்லோரும் ஒரே மாதிரியாகக் காணப்படுகிறீர்கள்?”
சுவாமி விவேகானந்தர் படத்தின் முன்னால் நின்று சற்று உற்றுப்பார். அவர் ஓங்கி உயர்ந்து கம்பீரமாக நிற்பதைப்பார். அவர் நிற்கும் விதமே அவர் குறிக்கோளைப் பறைசாற்றுகிறது. நம்முடைய பாரம்பரிய ஞானத்தைப் பற்றி பெருமை கொள்ளச் செய்தவர் அவர்தான். கருதிய செயல் கைகூடும் வரை விழிப்புடன் பணியாற்றுமாறு அறைகூவல் விடுத்தார்.
சுயமரியாதையையும், நாட்டுப்பற்றையும் நம் குருதியில் கலக்கச் செய்தார். 1893-ல் நடந்த சிகாகோ சர்வமத மாநாட்டில் ஆற்றிய எழுச்சி உரை உலகப்புகழ் வாய்ந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த என் சகோதரிகளே, சகோதரர்களே – என்ற அவரது தொடக்க வரி, அவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. ஆம், அவர் எப்போதும் ஓங்கி உயர்ந்து நின்றார்; வென்றார்.
செல்வாக்கு
ஒருவனுடைய வெற்றியில் முக்கிய பங்கு வகிப்பது சொல்லும் திறன். வாயால் சொல்லுதலும், எழுத்தால் சொல்லுதலும் மிக முக்கியம். அதற்காக நீ ஒரு பெரிய பேச்சாளராகவோ, எழுத்தாளராகவோ இருக்க வேண்டியது அவசியமில்லை. குறைந்த அளவு நாம் சொல்ல நினைத்ததைப் பிறருக்குப் புரியும்படி சொல்லத் தெரிய வேண்டும். மொழி என்னும் ஊடகத்தை பேச்சிலும் எழுத்திலும் சரியாகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும். இத்தகைய திறமை இல்லாதவரை மணம் வீசாத காகித மலருக்கு ஒப்பிடுவார் திருவள்ளுவர்.
இணரூழ்த்தும் நாறா மலரனையர் கற்றது
உணர விரித்துரையா தார். (குறள் 650)
என்று உறைக்கும் படி உரைப்பார்.
எனவே சொல்லும் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து பயிற்சி செய்ய வேண்டும். உலகத்தின் எந்த மூலைக்கும் செல்ல வேண்டிய கட்டாயம் உனக்கு ஏற்படும். ஆங்கிலம் மற்றும் பிறமொழிகளில் தேர்ச்சி கொள்.
சொல்லும் திறன் மற்றும் செல்லும் திறன்
சொல்லும் திறன் இல்லாதவர்க்குச் செல்லுந்திறனும் இருக்காது. அவர் போடும் விண்ணப்பம் கூட உரிய செய்தியை சொல்லாது, எனவே செல்லாது.
கையெழுத்து
கட்டுரை எழுதுதல் என்பது ஒரு கலை; ஒரு திறன். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் நீ பெற்றமதிப்பெண் எழுதும் திறனுக்குக் கிடைத்தது என்பதே உண்மை. IAS / IPS தேர்வில் கூட கட்டுரை வினாக்களை எப்படி எழுதுகிறோம் என்பதைப் பொறுத்து தான் வெற்றியும் தோல்வியும் உறுதியாகிறது.
எழுதும் திறனோடு கையெழுத்துத் தெளிவும் அழகும் முக்கியம். மோசமான கையெழுத்தில் என்னதான் சரியான விடையை எழுதினாலும் திருத்தும் ஆசிரியரால் சரியாகப் புரிந்து கொள்ள முடியாது. என்னதான் கணினியுகம் என்றாலும், எழுத்துமுறைதேர்வுகள் இருக்கும் வரையிலும் அழகான கையெழுத்து அவசியமே. எனவே நீ ஏதாவது குறுகியகால கையெழுத்துப் பயிற்சி இருந்தால், அதில் சேர்ந்து பயிற்சி பெறுவது நன்று.
முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.
Author: முனைவர் செ. சைலேந்திர பாபு, ஐ.பி.எஸ்.
தொடர்ச்சி அடுத்த இதழில்…….
“Be Ambitions Boys and Girls” ஆங்கில நூலிலிருந்து தமிழாக்கம்
- திரு.கோவிந்தராஜன்

0 comments:

Post a Comment